Saturday, 24 October 2015

நியூட்டன் அறிவியல் மன்றம் - சிந்தனையைத் தூண்டும் அறிவியல் போட்டிகள்

1-3 வார்டு உத்திரமேரூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நியூட்டன் அறிவியல் மன்றத்தின் சார்பில் வருடந்தோறும் நடைபெறும் சிந்தனையைத்தூண்டும் அறிவியல் போட்டிகள் 2015-16ம் கல்வியாண்டிற்கான  நிகழ்வுகள் 2015 அக்டோபர் 20ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. 


எங்கள் பள்ளிக்கு அருகாமையிலுள்ள 12 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர்.  ஒவ்வொரு  பள்ளியிலிருந்தும் 10 மாணவர்கள் 1 ஆசிரியர் என எங்கள் பள்ளியே விழாக்கோலத்துடன் காட்சியளித்தது. காலை 9.30மணியிலிருந்து 10,15மணி வரை மாணவர்கள் பதிவுசெய்யும் நிகழ்வு நடைபெற்றது. சிந்தனையைத்தூண்டும் அறிவியல் போட்டியின் துவக்கவிழா நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.  


அருகாமைப்பள்ளிகளிலிருந்து வந்திருந்த அனைத்து ஆசிரியர்களும், நடுவர்களாக திருப்போரூர் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளையிலிருந்து வந்திருந்த தோழர்களும், ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலக ஊழியர் அவர்களும், எங்கள் உத்திரமேரூர் ஒன்றியத்தின் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், வழிகாட்டும் நெறிமுறைகளையும் எடுத்துரைத்தனர்.  


சிந்தனையைத் தூண்டும் அறிவியல்போட்டிகளின் சிறப்புகள் என்னவெனில் மாணவர்களின் எண்ணத்தில் மனதில் புதைத்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் 5விதமான போட்டிகள் நடைபெறுகின்றனர். பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி,ஓவியப்போட்டி, அறிவியல் மாதிரிகள் தயாரித்தல், வினாடி வினா என இப்போட்டிகளில் மாணவர்கள் தங்கள் தனித்திறமையினை வெளிக்காட்டும்விதத்தில் நடத்தப்படுகின்றன.  

1. பேச்சுப்போட்டி -  தலைப்பு - அறிவியல் அறிஞர்கள் 
      மொத்தம் 24 மாணவர்கள் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்த அவர்களின் பேச்சின் வீச்சு மிகவும் அருமையானதாகவும் மிகவும் கருத்துமிகுந்ததாகவும் அமைந்திருந்தது. 

2. கட்டுரைப்போட்டி - உனது எண்ணங்களில் அறிவியல் அறிஞர் 
      கட்டுரைப்போட்டியில் 24 மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் துடிப்புடனும் கலந்துகொண்டனர்.  அவர்களின் கருத்துக்கள் மற்றும் சொல்லாற்றல் மிகவும் எடுத்துக்கூறும் விதமாக அமைந்திருந்தது.
3. ஓவியப்போட்டி  - உனக்கு பிடித்த அறிவியல் அறிஞர்  
                  எண்ணங்களை தூரிகையாக்கி அவற்றிற்கு வண்ணமிட்டு அனைவரையும் மகிழ்ச்சியூட்டம் வகையில் மாணவர்களின் ஓவியப்போட்டி நிகழ்வு நடைபெற்றது.  பெரும்பாலானோர் ஏவுகனையில் நாயகன் அவர்களையும், புவிஈர்ப்புவிசையின் நாயகன் அவர்களையும் வரைந்திருந்தனர்.  படைப்புகள் அனைத்தும் பல்வேறு கருத்துக்களையும் அழகினையும் எடுத்தியம்பியது.





4. அறிவியல் மாதிரிகள் - முதல் பருவத்திற்குரியது
          ஏன்? எதற்கு?எப்படி? என வினவி விடை காண்பது அறிவியல் என்பதை எடுத்துக்கூறும் விதமாக சோதனை செய்துஅதிலிருந்து பொருளை புரிந்துகொள்ளுதல் என்ற செயல்பாட்டினை விளக்கும்விதத்தில் மாணவர்களின் அறிவியல் மாதிரிகள் அமைந்திருந்து. அவர்களின் விளக்கங்களும், எடுத்தியம்பிய விதமும் அருமையாக இருந்தது.
5. வினாடி வினா - முதல் பருவத்திற்குரியது
  •  அறிவியல் அறிஞர்கள், 
  •  ஏன்?எதற்கு?எப்படி? சுற்று
  •   அளவுகளும் அலகுகளும்
  •   பொதுச்சுற்று
  •   படச்சுற்று
  •   வீடியோ கிளிப்பிங் சுற்று 
  •  சமூகவியல்  என பல சுற்றுகள் மூலமாக மாணவர்களின் உடனடியான விடைகளையும், சிந்தனைத்திறனையும் வெளிப்படும் வகையில் போட்டிகள் நடைபெற்றன.


 மாணவர்களின் வெளிப்பாடுகள் மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்து.  சரியான வாய்ப்புகள் வழங்கப்படும்போது அதற்குரிய வெற்றிகள் கண்டிப்பாக அனைவருக்கும் செல்லும் என்பதற்கிணங்க வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும், அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  மேலும் இன்றைய போட்டிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளிகளை வாழ்த்தி மென்மேலும் பல பரிசுகளையும் வாய்ப்புகளை சரியான விதத்தில் பயன்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
  









No comments:

Post a Comment